Friday, April 11, 2014

உலுவை


 அவனை நான் சிறுவயதிலிருந்தே கவனித்து வந்து இருக்கிறேன் . அவனிடம் குறை என்றால் அது பணம் மட்டும்தான் . அதற்காக அவன் ஒருபோதும் கவலை பட்டது இல்லை . அதற்கு காரணம்  கோடாங்கி வாத்தியார் .   அவர் ஒரு முறை ஏரியில் குளித்துக்கொண்டிருக்கும்போது தவறுதலாக அவரின் கோல்ட் வாட்ச் ஐ ஏரியிலேயே வைத்துவிட்டு போய் விட்டார் . அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த இவன் ,அதை பத்திரமாக எடுத்து அவரிடம் கொடுத்தான் .  அப்போது இவன் மேல் அவருக்கு அளக்க முடியாத பூரிப்பு. காரணம் அந்த கடிகாரத்தின் மதிப்பு 4500 ரூபாய் . இதை எடுத்த ஒரு நாளிலேயே கொடுத்துவிட்டானே என்று .  அதை சட்டென்று மறந்துவிட்டு இவனை விசாரிக்க ஆரமித்தார் ,
தம்பி யாருப்பா நீ ? அய்யா நான் கொரவன் மகன் .  அட ஒக்கால ஓழி ,கொரவன் மொவனா நீ? உங்க அப்பன் என் கொள்ளையில தழ ஒடிக்கவந்து மாட்டுனவன்  ,அவனுக்கு  பொறந்த பய நீ இவளோ நல்லவனா இருக்கியே ,சரி எத்தனாவது படிக்கிற? அய்யா நான் ஏழாம்ப்பு படிக்கிறேன்.  நம்ம பள்ளிக்கூடத்துல தானே , சரி உனக்கு வருசா வருஷம் நோட்டு புத்தக செலவ நான் பாத்துகிறேன் . நல்லா படி . கைல என்னா வச்சி இருக்க ? அய்யா அது மீனுங்க . உசுறு இருக்கா?  இப்பதானுங்க புடிச்சது அம்புட்டும் சிலேப்பி . சரி இந்தா 10 ரூபாய் அந்த மீன கொடு . இல்லைங்க அய்யா ஊட்டுல சாப்புட ஒண்ணும் இல்ல ,இத எடுத்துக்கிட்டு போய் தான் வருக்கணும் ,அப்பாவும் அம்மாளும் காட்டுமன்னார்குடிக்கு நெல் அறுக்க போய் இருக்காங்க . நாளைக்கி வராங்க ,அரிசி தீர்ந்து போச்சி, ரேஷன் கடையும் சனிக்கிழமைதான் தொறப்பான் ,வேணும்னா வாங்க நானே உங்களுக்கு வறுத்து தறேன்.
அன்று இவன் வறுத்து கொடுத்த மீனை சாப்பிட்டவர் ,இன்று வரை மீன் என்றால் அது கொரவன் மொவன் வறுவல் தான் என்று தன் பொண்டாட்டி உட்பட கண்ணில் படும் எல்லோரிடமும் சொல்லிவந்தார் .
டேய் கொரவா ,டேய்
அய்யா என்ற படி உள்ளிருந்து வந்தார் கொரவன் . எங்கடா உன் புள்ள ? அய்யா உள்ள தூங்குராணுங்க . அவங்கிட்ட மீன் பிடிக்க சொல்லு ,சாயங்காலம் வரேன் ன்னு சொல்லிபுடு .  தூக்கத்தில் இருந்தவனை எழுப்பினார் கொரவன் . தம்பி வாத்தியார் மீன் புடிக்க சொன்னார் , சாயங்காலம் வரேன்னார் என்று சொல்லி முடிப்பதற்குள் ,கூரையின் மேல் பனியில்  நனைந்து கொண்டிருந்த தூண்டிலை எடுத்தான் . தக்கை பனியில் நனைந்திருந்தது . நேராக ஓடி போருக்குள் இருந்த சோளத்தட்டையை ஒடித்தான் . அதை கிழித்து காய்ந்திருந்த சோளத்தண்டை நொடியில் ஒடித்து தக்கை ஆக்கினான் . ஏரிக்கு செல்லத் தயாரானபோது சட்டென்று நினைவுக்கு வந்தது மண் புழு வேணுமே . சரி அத குப்பைல நோண்டிக்கலாம்னு விர்ரென்று ஓட ஆரமித்தான் .  காலை நேரம் என்பதால் வெறும் சிலேப்பி தான் மாட்டும் . அதற்கு காரணம் இருந்தது . ஊராட்சி மன்ற தலைவர் ஏரியை அந்த வருடம் குத்தகைக்கு எடுத்திருந்தார் . இரவு நேரங்களில் பண்ணி வெட்டையை சாக்கில் கட்டி மூழ்கடித்துவிடுவார். அதை தின்பதற்கு சிலேப்பிகள் கரையின் ஓரம் வருவதுண்டு . பண்ணி வெட்டை கொட்டுரத ஊர்ல யாரும் கேட்க முடியாது ,கேட்டா அரசாங்கம் கொடுக்குற எந்த சலுகையும் கெடைக்காது. அதுக்கு பயந்தே அந்த தண்ணியில் குளிச்ச மக்கள் தோல் வியாதி வந்து தர்மாசுபத்திரிக்கு போவதை நானே பார்த்து இருக்கேன்.  கரையின் ஓரம் இருந்த புளிய மரத்தின் அடியில் இருந்த குப்பை குழியில் குச்சியால் தோண்டி ஒரு புகையிலை பேப்பரில் கொஞ்சம் மண் நிரப்பி பிடித்த மண் புழுவை அதில் விட்டான் . மண் புழுவின் மீது எப்போதும் ஒரு திரவம் சுரந்தவாறே இருக்கும் ,சலியை போல கொழக்கொழ தன்மை யுடையது .
புழுவை கையால் தொடும்போது ஒட்டிக்கொள்ளும் ,கையை விட்டு பிரிவதற்கு பலமணி நேரமாகும் . அதையெல்லாம் இவன் கண்டுகொள்வதில்லை. வாத்தியாருக்கு மீன் பிடிப்பதென்றால் எதுவும் மறந்து போகும் .  கரையின் ஓரம் இருந்த ஆவாரம் செடியின் பக்கத்தில் உட்கார்ந்து மூங்கிலில் கட்டியிருந்த நரம்பை அவிழ்த்தான் . அதன் நுனியில் கட்டப்பட்டிருந்த கொக்கிவடிவ முள்ளில் ,ஒரு மண் புழுவை லாவகரமாக கோர்த்தான் . அந்த முள்ளில் புழுவை கோர்த்தல் அவ்வளவு எளிது அல்ல.நம் கையசைவிற்கு ஏற்றவாறு புழு நெளியும் ,அழுத்தி பிடித்து சரியாக நுழைக்காவிட்டால் ஒரு பொழுது கூட ஆகும் .
கடலில் வலை விரிப்பது போல ரஜினிகாந்த் ஸ்டைலில் ஏரிக்குள் தூண்டிலை வீசினான் . அமைதியாக கையை அலம்பிட்டு ,ஆவார செடியின் மேல் தூண்டிலை வைத்தான் . ஆழத்தை யூகித்து பார்த்தான் . ஆழம் குறைவான இடத்தில் தக்கையை கொஞ்சம் மேலே கட்டவேண்டும், ஆழம் அதிகமான இடத்தில் கொஞ்சம் நீளமாக தக்கையை விட்டு கட்டவேண்டும் என்பதை நினைவு படுத்தி தூண்டிலை எடுத்து ஆழம் பார்த்தான் . எதிர்பார்த்த அளவு ஆழம் இருந்தது . மீண்டும் தூண்டிலை வீசி ஆவாரம் செடியில் வைத்தான்.
தூரத்தில் மேல சத்தம் அங்கிருந்து வரும் காற்றில் புதிதாக சேர்ந்திருந்தது . சத்தம் நல்ல காரியங்களுக்கு வருவது போல தெரியவில்லை ,எழவு வீட்டில் இருந்து வருவதை இசை திறமையை வைத்து கண்டுபிடித்து விட்டான் . தூண்டில் போட்டு வெகு நேரமாகியும் எந்த மீனும் இவன் புழுவை நக்கவில்லை. ஒரு வேலை தின்னு இருக்குமோ என்று தூண்டிலை எடுத்து பார்த்தான் . புழு நெளிந்து கொண்டிருந்தது .
 வேறு இடத்தில் போடலாம் என இடப்பெயர்ச்சி செய்தான் .  சூரியன் உச்சிக்கு வந்தும் எந்த மீனும் அகப்படவில்லை. இரையாக ஐந்தாறு மண் புழுவை ஏரிக்குள் வீசி காத்திருந்தான் .  தூரத்தில் மக்கள் கூட்டமாக கையில் குடத்துடன் வந்துகொண்டிருந்தனர் . எழவு வீட்டிற்கு தண்ணீர் எடுக்க வந்திருந்தனர்.  ஏரிக்கரையில் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன . தூண்டிலை கவனிப்பதை விடுத்து  கரை பக்கம் பார்வையை போட்டான் . ஏதோ தெரிந்த முகம் ஓயாமல் அழுவது தெரிந்தது . யாரென்று மட்டும் தெரியவில்லை. தக்கை லேசாக அசைந்தது . டபடப வென்று கொத்தி உள்ளே இழுத்தால் அது சிலேப்பி, மெதுவாக கொத்தி ஒரு வட்டம் போட்டு உள்ளே இழுத்தால் அது கெளிர். கொத்திக்கொண்டே இருந்தால் அது கெண்டை இதில் எந்த அடையாளமும் தக்கை அசைந்ததில் தெரியவில்லை . ஒரு வேலை அலையின் வேகத்தில் அசைந்து இருக்கலாம் என்று தூண்டிலை எடுத்து பார்த்தான் ,காலையில் கோர்த்த அதே புழு உயிரை விட்டிருந்தது . இந்த புழு ராசியில்லை என்று அதை அவிழுத்து ,வேறு புது புழுவை கோர்த்தான்.  வந்த மக்கள் குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு கிளம்பினர்.  இவன் உதடு வறண்டு போய் இருந்தது , காலையில் இருந்து உடலுக்கு சக்தி அளிக்க கூடிய எதையும் இவன் சாப்பிடவில்லை. ஏரியின் எதிர் பக்க கரைக்கு சென்று படிதொறையில் தூண்டில் போட்டான் . படிதுறைக்கு பக்கத்தில் இருந்த கொட்டாய்யில் பினவண்டி இழுக்கும் சத்தம் கேட்டது . வெட்டியான்கள் பின வண்டியை தள்ளிக்கொண்டு இருந்தனர் . யார் செத்தது என்று கேட்க தயாரானன் . வெட்டியான் இடுப்பில் இருந்த கோட்டர் பாட்டிலை திறந்து ,இருந்த மூவரும் ஆளுக்கு கொஞ்சமாக குடித்துக் கொண்டிருந்தினர் ,அதை பார்த்ததும் கேட்கவில்லை . வண்டியை தள்ளிக்கொண்டு புறப்பட்டனர். பாட்டிலில் ஒரு மூடி அளவிற்கு சரக்கு மீதம்  இருந்தது.
பொழுது சாய்ந்தது . பொணத்தை எடுத்துட்டாங்க ,தாரை தப்பட்டை முழங்க ,வான வேட்டுகளுடன் தெரியாத பொணம் இடுகாட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது .  மூணு ஊருக்கு பொதுவான இடுகாடு . ஏரிக்கு பக்கத்துல இருந்தாலும் மூணு ஊரை விட்டு தள்ளியே இருந்தது . பிரம்மை பிடித்தவன் போல தன்னை மறந்து தக்கையை பார்த்துக்கொண்டிருந்தான் . ஒரு அசைவு ,லேசாக தராசு முள் துடிப்பது போல ,அந்த ஒரு நொடி அசைவில் தீர்மானித்தான் நிச்சயம் அது உலுவைதான் . உலுவை அளவிற்கு தில்லான மீன் இருக்க வாய்ப்பில்லை . கொத்திய முதல் கொத்திலேயே புழுவை கவ்வும் லாவகம் உலுவைக்குதான் தெரியும் . காலையில் இருந்து காத்திருந்ததற்கு பலன் என்று எழுந்து தூண்டிலை மாட்டு வண்டி ஓட்டுபவன் போல பிடித்து அந்த ஒரு நொடிக்காக காத்திருந்தான் .
பொணம் ஒத்த புளியமரத்திடம் வந்து கொண்டிருந்தது . சடசட என மழை எதிர்பார்க்கா வண்ணம்  பெய்ய ஆரமித்தது ,வெயிலும் தன் பங்கிற்கு அடித்துக்கொண்டிருந்தது . இப்படி ஒரு வித்யாசமான வானிலையை அவன் அதிகமாக பார்த்ததில்லை . யாராவது நல்லவங்க செத்துபோனா மழை வரும்னு அவனோட அம்மா சொன்னது நினைவிற்கு வந்தது . சடக்கென்று தூண்டிலை இழுத்தான் ,நல்ல ரெண்டு கிலோ எடையுடைய ஒரு உலுவை தூண்டிலின் நுனியில் மாட்டி இருந்தது . அவன் கண்ணில் அப்படி ஒரு சந்தோஷம் சாயங்காலம் வரும் வாத்தியார் வயித்துக்கு நீ போதும் ,இனிமே அம்புடுறது எனக்கும் எங்க அப்பனுக்கும் . பிடித்தமீனை ஒரு குச்சியால் அதன் செதில் வழியாக உள்ளே விட்டு ,வாய் வாழிய கோர்த்தான் . அந்த மீனால் சுவாசிக்க முடியும் ,ஆனால் நீந்த முடியாது . கரையின் மேட்டில் குச்சியை சொருகி, தண்ணீரில் கவிழ்த்த வாறு மீனை நீருக்குள் விட்டான் .

பொணத்திற்கு முன்னே வந்து கொண்டிருந்தவர்கள்,  இருந்தாலும் வாத்திக்கு நல்ல சாவுதான் ,கோவில் முன்னாடி செத்து போய் இருக்கான் . நேரா சொர்க்கத்திற்கு போவான் ,மழை கூட பேயுது பாரு . என்றபடி இவனை கடந்து போனார்கள் .  மழையின் வேகத்தை விட இவன் கண்களிலிருந்து தண்ணீர் வேகமாக மழையுடன் கரைந்து ஏரிக்கு நீர் சேர்த்துக்கொண்டிருந்தது .
இவன் சொருகி வைத்திருந்த குச்சி தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது . அதை எடுத்து பார்க்கும் பொது அதில் கோர்த்திருந்த உலுவை நழுவி இருந்தது .
இவன் நினைத்து கொண்டான் . இனி யாருக்கு வேணும் அந்த உலுவை ...................................!

No comments:

Post a Comment