போன வாரத்திற்கு முன் பூ கருகி இருந்தது ,போன வாரம் இலை கருகி இருந்தது , இந்த வாரம் மரம் கருகிபோச்சி அடுத்த வாரம் எங்க வயிறு கருக போகுது. வாழ்வாதாரத்தை தொலைக்க போகும்
முந்திரி குடியினர். காட்டிற்கு போயி திரும்புவதற்குள் காலி ஆகின்றன பானை தண்ணி . .....
குரங்கோடு குரங்காக கூடையில் பழம் பொறுக்கி, குவியலாக கொட்டி , பழைய கஞ்சியை குடிச்சிட்டு கொட்டையையும் பழத்தையும் பிரிக்க பொழுது சாஞ்சி போகும் .கொட்டை மூட்டையை தலையில்
கட்டிக்கொண்டு, ஆட்டிற்கு கூடையில் பழம் எடுத்துக்கிட்டு, ஆநிறைகளோடு வீடு திரும்பும்போது நிலா வந்திருக்கும் .
மறுநாள் பொறுக்கிய கொட்டையை வெயிலில் வாட்டி ,மீந்திருக்கும்இடத்தில் பழத்தை வத்தல்
போட்டால் வீதியெங்கும் வீசும் முந்திரிபழ வாசம் .
கோடை முழுவதும் முந்திரி பழத்தின் குளிர்ச்சியில் கழிக்கும் எங்களுக்கு இந்த வருடம் , இன்னும் பத்து ஆண்டுகளுக்கு பிறகு நடக்க போகும் என் திருமணத்துக்கு இப்பவே விறகு கட்டைகளாக
,மாறுகின்றன முந்திரி மரங்கள் . காய்க்கிற கொட்டையில் ஒரு பங்கை பாயாசத்திக்கு இருப்பு வைத்திருப்பது வழக்கம் .ஆனால் இந்த வருடமோ பாயாசத்திக்கு மட்டும் தான் காய்க்கும் போல இருக்கு.
ஊருக்குள் புதுசா கெளம்பி இருக்குற சாமிக்கிட்ட மழைய பத்தி கேட்டா மலை ஏறிடுது .
போர் அடிக்க கடன் தரமறுக்கும் வங்கிகள் ,மின்சாரம் தர மறுக்கும் அரசு , இவையெல்லாம் இந்த வருடம்
எங்களுக்கு என்ன கதை சொல்ல போகுது ?
பருவம் பார்த்து விதைச்ச பொருளுக்குதான் விலை ஏத்துமா அரசு? , ஆண்டிற்கு ஒரு முறை விளையும் எங்க முந்திரு பருப்பு அத்யாவசியமான பொருள் நு சொல்லி
விலை ஏத்த மறுக்குறாங்க ..
கொள்ளைக்கி போனா அங்க வேதனைதான் வெளஞ்சி நிக்கிது.
அம்மாவாசைக்கு அமாவாசை பிஞ்சி இறங்கும் . இந்த அமாவாசை எங்க வயித்துல நெருப்புதான் இறங்கும் . கருகி போன பூவை பார்த்த்து ஏமாற போகுது அமாவாசை .
ஒரு மூட்டை கொட்டை போட்டா ,ஒரு பவுனு எடுக்கலாம் ,இப்ப வெளையிற அம்புட்டையும் போட்டாலும் அறை பவுனுக்கு நாக்கு தள்ளுது. பவுனு விலை எறிபோச்சி ,எங்க விளைச்சலோ குறைஞ்சி போச்சி.
தீ மிதிக்கறதுன்னா என்னன்னு தெரியனும்னா எங்க பொட்ட காட்டுல வந்து கொட்டை பொறுக்குனா தெரிஞ்சிக்கலாம்.
உச்சிவெயிலுல நடு காட்டுல இருந்து ரோட்டுல போற ice காரன கூப்பிட்டுகிட்டே ஓடி ,இருபது கொட்டைய கொடுத்து ரெண்டு ice வாங்கிக்கிட்டு , வாங்குன ice கரையிறதுக்குள்ளஅம்மாவும் நானும்
சாப்பிடுநுமேன்னு , முந்திரி மரத்துல புகுந்து ஓடி ,எத்தன பள்ளிக்கூட uniform சட்டை குச்சியில் மாட்டி கிழிஞ்சி இருக்கு !
துண்ட தண்ணியில நனச்சி ,தலையில கட்டிக்கிட்டு அலக்கு குச்சை எடுத்து அண்ணாந்து பார்த்துகிட்டே ஒரு முந்திரிய சுத்தி வரதுக்குள்ள , நாக்க்கு வறண்டு போகும் ,, அப்படி இருந்தும் கொட்டை பொறுக்க சந்தோஷமா இருக்கும் ,ஏண்ணா விளைச்சல் அப்படி இருக்கும் ,இலையே தெரியாத அளவுக்கு கொத்து கொத்தா சிகப்பும்,மஞ்சள்லுமா பழம் தொங்கி கிட்டு இருக்கும் .
. விடியிறதுக்கு முன்னாடி போனால் மயில் இறகு எடுக்கலாம் ,இருட்டுனதுக்குஅப்புறம் போனால் முயலோடு வரலாம் . எத்தனை வளங்களை அடக்கியது எங்க முந்திரி காடு . இப்ப எங்க பார்த்தாலும் மரங்கள் சடலங்களா இருக்கு .
வர வருஷம் செமஸ்டர் fees எப்புடி கட்றதுன்னு யோசிச்சிக்கிட்டே எழுதிக்கிட்டு இருக்கேன் .
No comments:
Post a Comment