Thursday, June 19, 2014

NEXT SUPER STAR?




இன்றைய இணைய தலைப்பு செய்தி
அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான்
என்பதை கருத்து கணிப்பு நடத்தி முடிவு செய்துள்ளது குமுதம்.
இதழ் அதகமாக விற்க வேண்டும் என்பதற்காக சீஸனுக்கு இப்படி இரு தில்லாலங்கடி வேலையை செய்கிறது குமுதம்.
சினிமா வின் தொடக்க காலத்தில் சின்னப்பா ,கிட்டப்பா ,பாகவதர் இவர்கள்
 காலங்களில் இவர்களுக்கென்று ஒரு பிரதான திரை நடை இருந்தது.
அப்போதெல்லாம் இந்த சூப்பர் ஸ்டார் போட்டி இல்லை என்று நினைக்கிறேன்.
 இருந்திருந்தால் யாராவது ஒரு தாத்தா எப்பவுமே சூப்பர் ஸ்டார்
என் தலைவன் பாகவதர்னு
 கமெண்ட் போட்டிருப்பார். இந்த MGR,சிவாஜி காலத்தில்தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தின் ஒரு முன்னோட்டமாக இருந்திருக்க வேண்டும்.
இதற்கு அடுத்த தலைமுறையான ரஜினி ,கமலில் இருந்துதான் இந்த சூப்பர் ஸ்டார் என்ற பதவி அறிமுகபடுத்தபட்டது.
அதிலும் பாலச்சந்தர் சார் தான் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை சூட்டி இவ்வளவு சிக்கலில் விடுகிறார்.
சூப்பர் ஸ்டார் இருக்கட்டும் அதென்ன அடுத்த சூப்பர் ஸ்டார்?
சூப்பர் ஸ்டார் இப்போதும் சூப்பர் ஸ்டாராகத்தான் இருக்கிறார் ,பிறகெதற்கு அடுத்த சூப்பர் ஸ்டார்.
ஒரு விஷயம் யாருக்குமே புரிவதில்லை.
 சிவாஜி,MGR எல்லாம் 60வயதில் தனி ஹீரோவாக ,
அதுவும் இளம் ஹீரோயின்களுடனெல்லாம்
நடித்ததில்லை. அந்த வயதில் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் தோன்ற ஆரமித்தார்கள்.
 இது mgrஐ தவிர்த்து அனைத்து காலகட்ட
பெரிய நட்சத்திரங்களுக்கும் பொருந்தும்.
 ஆனால் ரஜினியுடன் ஜோடி சேர இன்னமும்
இளம் கதாநாயகிகள் போட்டி போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.அவரை வைத்து 200,300 கோடிகளில் படமெடுக்க
தயாரிப்பாளர்கள் தயாரக உள்ளனர் ,
அப்படி இருக்கும் போது எதற்கு அடுத்த சூப்பர் ஸ்டார்?
விஜய் ,அஜித இருவருமே இன்றைய தலைமுறை சினிமாவின் மாபெரும் விருட்சங்கள்.
இவர்கள் இருவருமே
சூப்பர் ஸ்டாரின் இடது மற்றும் வலது ஓரத்தில் இருக்கிறார்கள்.
ரஜினிக்கு முந்தைய தலைமுறை நடிகர்கள் அனைவருமே தங்களுக்கென்ற பிரதான திரைநடையின் மூலமாகத்தான்
ரசிகர்களை கவர்ந்திழுத்தார்கள்.
 அது எல்லா நடிகருக்கும் பொருந்த கூடியது. இப்படி ஒருவரின் பட்டத்தை
அடுத்து வரும் தலைமுறை நடிகருக்கு எளிதாக கொடுத்தால் அவர்களின் புகழ் மறைந்துவிடும்.
 அதுமட்டுமல்லாமல்
அந்த பட்டத்தை பெறுவோரும் பெரிதாக ஜொலிக்க முடியாது.
எப்போதுமே அந்த பட்டதின் குறையை ,அல்லது நிறைய நிவர்த்தி செய்யவே முடியாது.
அதனால் விஜய்க்கு இப்போது இருக்கும்
இளைய தளபதி என்ற பட்டத்தால் வரும் தலைமுறைக்கு அவர் அறிமுகமானால்தான் அவருக்கு சிறப்பு.
அது போலவே அஜித்திற்கும் ,அவரும்
தல என்ற பட்டத்தால் வரும் தலைமுறைக்கு அறிமுகம் செய்யப்பட வேண்டும், சூப்பர் ஸ்டாரும் அப்படியே...


Wednesday, May 14, 2014

ஊரின் பெரும் புள்ளி


தொட்டிக்குள் முழுகி இருந்த மாடு திடீரென எழுந்தது . 
இதற்கு மேல் தண்ணீர் குடிக்க முடியாது என்று அது உணர்ந்ததை காடன் தெரிந்து கொண்டான் . 
பொதுவாக வேற எந்த மாட்டிற்கும் அவன்
 அவ்வளவு நேரம் கொடுப்பதில்லை . 
கிசோ அவனுக்கு தெய்வம் . 
நாள் ஒன்றுக்கு 5லிட்டர் வரை பால் கறந்து கொடுத்து அவனை காப்பாற்றுவதால் கிசோவை மட்டும் தொட்டியில் முழுகி தவிடு திண்ண அனுமதிப்பான் .
 நாக்கை வெளியே நீட்டி சரிந்த வாய்பகுதியில் ஒட்டியிருக்கும் தவிடு துகள்களை நக்கியபடியே
 கிசோ தொட்டியை விட்டு நகர்ந்து செல்லும் .
 வாசலில் வைத்திருந்த தண்ணீர் டப்பாவை எடுத்துக்கொண்டு ,பட்டியில் கிடந்த குச்சியையும்,வெற்றிலை டப்பவையும் எடுத்துக்கொண்டு
 மாடுகளை ஓட்டிக்கொண்டு காடன் புறப்பட்டான் . 
பொதுவாக பொன்பரப்பி பஸ் வடக்கே செல்லும் போது புறப்படுவான் ,
சாய்ங்காலாம் அந்த பஸ் திரும்பும் போது ஓட்டிக்கிட்டு வந்துடுவான் . 
இன்று கொஞ்சம் நேரத்திலேயே புறபட்டான். அடுப்பில் வெந்து கொண்டிருந்த நாட்டுக்கோழியே அதற்கு காரணம் . காடனுக்கு நாட்டுக்கோழி என்றால் நாவில் எச்சில் அதிகமாகவே ஊரும் . 
வடித்த சோற்றில் கோழித்துண்டுகளை புரட்டி சுவைப்பதுதான் அவனுக்கு இந்த உலகத்தின் உயர்ந்த உணவு . 
அதற்காகவே மாடுகளை வேகமாக ஓட்டினான் . 
தொட்டியில் சரியாக தண்ணீர் குடிக்காத மாடுகள் சாலையில் குடிநீர் குழாய்களில் தேங்கி இருக்கும்
 தண்ணீரை குடித்துக்கொண்டிருக்கும் ,அது காடனுக்கு வெறுப்பை தருவதால் அப்படி குடிக்கும் மாடுகளை பின் தொடையில் வீங்கும் அளவிற்கு அடிப்பான் . 
சாலை முழுவதும் ஊர் மக்கள் எதையாவது வெயிலில் உலற்றிக்கொண்டு இருபார்கள் .
 இவன் மாடுகள் அனைத்தும் அல்ப்பங்கள் கிசோவை தவிர . 
அனைத்தும் வெயிலில் காய்பவற்றை திண்ண ஓடும் ,அதற்குள் காடன் குச்சால் அடித்தபடி வேகமாக ஓட்டுவான் . 
ஒரு வழியாக ஊரை தாண்டுவதற்குள் உலகத்தை நடந்தே சுற்றிவந்த அலுப்பு ஏற்பட்டு விடும் .  
காளை ,   ஒரு பசு கன்றின்மீது கால்களை தூக்கிக்கொண்டு அதை துரத்தியது ,
அதை பார்த்த காடன் இவனுக்கு மதம் தலைக்கேறிவிட்டது என முணுமுணுத்துக்கொண்டே விரட்டினான் . 
காடுகளுக்கு வந்த உடனே மாடுகள் தனித்தனியே பிரிந்து கொண்டிருந்தன .
கிசோ மட்டும் இவனுக்கு அருகிலேயே சாலையில் கிடந்த புற்களை வருடிக்கொண்டிருந்தது . 
அவ் ,அவ் என செல்லமாக மாடுகளை வார்த்தையால் தடவிக்கொண்டிருந்தான் . 
பையில் வைத்திருந்த வெற்றிலை டப்பாவை எடுத்து ,உள்ளே இருந்து ஒரு வெற்றிலையையும் கொஞ்சம் சுண்ணாம்பையும் எடுத்து ,
வெற்றிலையில் சுண்ணாம்பை தடவி நாலாக மடித்து வாயில் திணித்துக்கொண்டான் . 
சூரியன் உச்சிக்கு வந்துவிட்டதால் நிழலுக்கு ஒரு மரத்தை தேடினான் . 
அந்த காடுகள் முந்திரி மரங்களால் பின்னப்பட்டவை ,அங்கு அதை தவிர வேறெந்த மரங்களும் பெரிதாக இல்லை. 
இலையுதிர்காலம் என்பதால் இலைகளே கிராமத்து பண்ணை வீடுகள் போல அங்கொன்றும் ,இங்கொன்றுமாக இருந்தன. 
அதற்குள் மாடுகள் முந்திரி மரங்களின் ஊடே இவன் பார்வையை விட்டு விலகிசென்றிருந்தன . 
மாடுகளை பின் தொடர்ந்து சென்றான் .எப்போதும் கிசோதான் இவனுக்கு வழிகாட்டி . 
எல்லா மாடுகளும் சென்றபோதும் கூட கிசோ இவனுக்கு பக்கத்திலேதான் இருந்தது . 
கிசோவை பின்தொடர்ந்தால்  மற்ற மாடுகளை கண்டுபிடித்து விடலாம் என கிசோவை பின் தொடர்ந்தான் . 
ஒரு முந்திரி மரத்தின் வாசலில் புகுந்த [போது உள்ளிருந்து காட்டுமுயல் ஒன்று இவன் கண்விழிக்குள் குதித்து ஓடிக்கொண்டிருந்தது . 
நாட்டுக்கோழி பிடிக்கும்தான் ஆனால் முயல் கிடைக்கும்போது நாட்டுக்கோழி உள்நாட்டு உணவாகிவிடும் . 
கையில் இருந்த கம்போடு முயலை துரத்தினான் . அதுஓடும் வேகத்திற்கு இணையாக இவனும் ஓடிக்கொண்டிருந்தான் . 
துரத்தலின் போது முயல் மரத்தை பிளந்துகொண்டு ஓடும் ,காடன் மரத்தை சுற்றிக்கொண்டு ஓடுவான் . 
கிட்டத்தட்ட நெருங்கிவிட்டான் முன்னே இருக்கும் முந்திரி மரத்தில் நுழைந்து கொண்டிருந்தது முயல் . 
மரத்தின் அருகே போனபோது எந்த சத்தமும் இல்லை .முயல் மரத்தைவிட்டு வெளியில் போகவில்லை என்பது இவனுக்கு தெரியும் . 
யோசித்துக்கொண்டே பார்வையை உள்ளே திருப்பினான் .
 எட்டு அடி நீளத்தில் மலைப்பாம்பு ஒன்று முயலை அதன் வாய்க்குள் தள்ளிக்கொண்டிருந்தது . 
கருத்த மேனியுடன் ,தோலின் அரை அடி இடைவெளியில் தலையில் இருந்து வால் வரை கரும்புள்ளிகளை 
கொண்டு அருவெறுப்பான தோற்றத்துடன் முயலின் வடிவத்தை மாற்றிக்கொண்டிருந்தது .
 காடனுக்கு மனதில் குமட்டல் புறப்பட்டு வாய்க்கு வருவதற்குள் அந்த இடத்தைவிட்டு புறப்பட நினைத்தபோது  
அங்கே ஒத்தையடி பாதைகள் தென்பட்டன . அந்த பாதை காடன் வந்த பாதையல்ல  . 
அந்த பாதை வடக்கே நீண்டிருந்தது பாதையின் முடிவில் முள்வேலியால் அடைக்கப்பட்ட ஒரு நிலமும் ,அதில் ஒரு கேணியும் ,
கேணிக்கு  அருகில் இருந்த மணல் மேட்டிலிருந்து புகை மேகத்தைபோல பறந்துகொண்டிருந்தன . 
காடனுக்கு ஆச்சிரியமாக இருந்தது .எத்தனையோ முறை இந்த காடுகளுக்குள் இவன் மாடு மேய்க்க வந்திருந்தாலும் ,
இந்த விசித்திரமான புகை காடனுக்கு அதை காணவேண்டும் என்ற ஆவலை தந்துகொண்டிருந்தது . 
மெல்ல அந்த முள் வேலிகளின் பக்கத்தில் சென்றான் . 
காடன் சட்டை முழுவதும் முயலை துரத்தியதால் நனைந்திருந்தது,  ஒரு குழாய் இருந்தால் மரங்களுக்கு நீர் பாய்ச்சிவிடலாம் ,அந்த அளவிற்கு வியர்வை வழிந்துகொண்டிருந்தது .  
வெயிலின் தாக்கத்தால் மரங்கள் தாகமுற்றிருந்தது தெரிந்தது . 
காடு முழுவதும் வெக்கை . காற்றின் வருகைக்கு காத்திருந்தான் காடன் . அதே சமயம் உள்ளிருந்த புகை குறைந்துகொண்டிருந்தது . 
வேலிக்கு அருகில் இருந்த மரத்தை பிடித்து காடன் உள்ளே குதித்தான். 
வேலம் பட்டை வாசனை காடனுக்கு நன்றாகவே தெரியும் ,மெல்ல நகர்ந்தபடி அருகில் சென்றான் , அடுக்கி  வைக்கப்பட்ட பானைகளும் , பார்லர்களும் ,வேலம் பட்டைகளும், விறகுத்துண்டுகளும் இவனுக்கு காட்சி அளித்தன . காட்சியின் முடிவில் அங்கே சாராயம் காய்ச்சுவதை அறிந்தான் .மனித கழுகுகள் நிறைந்த இடமாக தென்பட்டது அந்த இடம் . காய்ச்சுவது யாரென்று பார்க்க தலையை தூக்கினான் . 
ஊரின் ஒரு முக்கியபுள்ளி . அவர் இவனுக்கு பெரிய ஆள் . ஆனால் இவனை அவர் கண்ணால் கூட பார்த்தது கிடையாது என்பது காடனுக்கு தெரியும் .
மனதில் வலுவை வரவைத்துக்கொண்டு அருகே சென்றான் . இவன் வருவதை பார்த்த மனிதகழுகுகள் ஆயுதங்களை கையில் எடுத்தன . அதை பார்த்தும் முகத்தில் எந்த சலம்பாலும் இல்லாமல் அருகில் நின்றான் காடன் . 
அண்ணே கொஞ்சம் சாராயம் வேணும் என கேட்டான் . கழுகுகள் வேலையை பார்க்க தொடங்கின . இவனை உற்றுபார்த்த அந்த ஊரின் பெரும்புள்ளி ,ஒரு பிளாஸ்டிக் குடுவையில் சாராயத்தை ஊற்றி கொடுத்தார் . இரண்டு மிடர்ரில் மடக் ,மடக் என குடித்து முடித்தான் . மெல்ல பேச்சை ஆரமித்தார் ஊரின் பெரும்புள்ளி ஆருடா நீ ? எந்த ஊர் ? என தொடர்ந்து இரண்டு கேள்விகளை அடிக்கிக்கொண்டே நிரம்பி வழிந்த பானையை மாற்றினார் . நான்கு ஊர்களுக்கு பொதுவான காடு என்பதால் எந்த ஊரை சொல்லலாம் என யோசித்துக்கொண்டிருந்தான் . அப்போது மனிதக்கழுக்குகள் நிரம்பிய பனையை எடுத்துக்கொண்டு ஊரில் விற்பதற்கு புறப்பட்டன . 
ஸ்டேசனுக்கு பின்னால மாட்டுக்கறி போடுற கொட்டாய் இருக்கு இன்னைக்கி கடைய அங்க போடுங்க , பக்கத்து ஊர் கலவரத்துனால ஸ்டேசனுக்கு கூட்டம் வரும் , என சொல்லி அனுப்பினார் அந்த ஊரின் பெரும்புள்ளி 
.  காடனுக்கு போதை ஓரளவிற்கு இருந்தது .  இன்னும் கொஞ்சம் சாராயம்  கேட்டு குடுவையை நீட்டினான் . 
காசு இருக்கா என கேட்டார் பெரும்புள்ளி . இல்லை , கறவை மாடு ஒண்ணு இருக்கு என போதையில் விடை சொன்னான் . 



Monday, May 5, 2014

மழை தரும் சுகம்

10:07 AM 5/5/2014



மழை தரும் சுகம் 

 நேற்றிலிருந்து ஆட்டம் காட்டிய வானம் ஒரு வழியாக இன்று என் ஊரில் தரை இறங்கியது . .
விடிந்தும் விடியாத காலை ,சேவல் தன் அலாரத்தை எழுப்ப ஊர் மக்கள் தன் பணிகளை செய்ய ஆயத்தம் ஆனார்கள் . 
இரவு முழுவதும் எங்கள் ஊரை முற்றுகையிட்டு ,சூழ்ந்திருந்த  மேகம் விடி காலைதான் தோதான நேரம் என நினைத்து 
லேசாக மழை துளிகளை விசிறிவிட்டது .
 மொட்டை மாடியில் சிமெண்ட் ஓடுகளின் தாழ்வில் உறங்கிக்கொண்டிருந்த நான் மழையின் வாசம் முகர்ந்து விழித்துக்கொண்டேன் .
 கண்களை துடைத்துக்கொண்டு மழையை ரசிக்க அமர்ந்தேன் . 
மழை என்றால் எப்படிப்பட்ட மழை , மயக்கம் என்ன படத்தின் ஆரம்ப காட்சியில் தோன்றும் இடி ,மின்னல் இல்லாத அமைதியான மழை .
 தண்ணீர் குழாய்களில் இருந்த குடங்களிலும்,குண்டாண்களிலும் மழை நீர் பட்டு ,இசை எழுந்து கொண்டிருந்தது . 
ஊரில் இருந்து மழையை ரசித்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன . 
மழையோ திருமண தம்பதியின் முதலிரவு போல மென்மையாக பெய்துகொண்டிருந்தது .
 அக்கினி வெயிலில்  தவித்துக்கொண்டிருந்த தரைகள் மழை அவ்வளவு பெய்தும் ஈரமே இல்லை.
 திடீரென மழை கொட்டத்துவங்கியது. அரை மில்லிமீட்டர் இடைவெளியில் மழைத்துளிகள் ஒன்றன் பின் ஒன்றாக பூமியில் விழுந்திக்கொண்டிருந்தன . 
நான் என்ன நினைத்தேனோ தெரியவில்லை ,திடீரென மழையோடு மழையாக நனைந்துகொண்டிருந்தேன் . 
அந்த நிமிடங்கள் பள்ளிக்கூடத்தில்  விடுமுறைக்காக பெருமழையை எதிர்பார்த்து  ஏமாந்த சோகம் அப்போது மறைந்திருந்தது .
 சண்டைக்கார மொட்டை மாடி என்றெல்லாம் பார்க்கவில்லை ,மழை என்றவுடன் அம்மாவின் கைபிடியை விட்டோடும் குழந்தையை போல 
அடுத்தவீட்டின் மொட்டை மாடியில் எகிறிவிட்டேன் . 
அந்த ஆனந்த சுகம் இரவில் தெரியும் விண்மீன்கள் அதே அளவில் நம் மீது விழுந்தால் எப்படி இருக்குமோ அப்படி . 
என்னோடு சேர்ந்து மழையில் நனைந்திருந்த தென்னையின் அடியில் போய் நின்றபோது ,
பனிசரிவில் வழுக்கி விளையாடும் விளையாட்டைபோல மழை நீர் 
தென்னை இலையின் வழியே சரிந்து என் மீது குவீயலாக விழுந்தன ,அது யாராலும் தயாரிக்க முடியாத ஷவர்.  
அப்படியே கையை உயரே தூக்கி முகத்தை வானுக்கு நேராக காட்டியபோது 
மேகத்தால் வேயப்பட்ட கூரையிலிருந்து திரவ கற்கண்டுகள் தலையிலும்,முகத்திலும்,உடலிலும் ,உருண்டும் ,சரிந்தும் ,ஊர்ந்தும் 
சொல்லக்கூடாத இடங்களில் நுழைந்தும் ,கால்களில் சரிந்தும் தரையில் விழுந்தபோது ,
இவ்வுலகின் மிகச்சிறந்த அழகியால் மசாஜ் செய்யப்பட்டது போல சுகம் சுகம் கண்டது மேனி 
அந்த நேரத்தில் தான் மழை கவிதைக்கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம் ,ஒரு கருப்பு கொடி காட்டியாரும் குடை பிடிக்க வேண்டாம் என்ற பாடலின் ஆழமான அரத்தம் விளங்கியது . பேரிரைச்சலோடு கொட்டிக்கொண்டிருந்த மழையால் அந்த மொட்டைமாடி குலமாகிபோனது . ஆழம் கணுக்காலுக்கும் கீழே இருந்தது ,அதில் படுத்து குளிக்க மனது ஆசைப்பட்டாலும் ,ஆழம் இல்லை என்பதை மூளை உணர்த்தியபோது கொஞ்சம்  ஏமாற்றமாக இருந்தது . 
சாலைகளில் நீர் வீட்டை விட்டு ஓடும் காதலன் ,காதலியை போல வாசலில் கிடந்த காலனியை இழுத்துக்கொண்டு சென்றது .
ஒரு காதலியுடன் நணைந்திருந்தால் இன்னும் சுகமாகவும் இருந்திருக்கும் ,இதை விட அழகாகவும் வர்ணித்தும் இருக்கலாம் 

.

Friday, April 11, 2014

உலுவை


 அவனை நான் சிறுவயதிலிருந்தே கவனித்து வந்து இருக்கிறேன் . அவனிடம் குறை என்றால் அது பணம் மட்டும்தான் . அதற்காக அவன் ஒருபோதும் கவலை பட்டது இல்லை . அதற்கு காரணம்  கோடாங்கி வாத்தியார் .   அவர் ஒரு முறை ஏரியில் குளித்துக்கொண்டிருக்கும்போது தவறுதலாக அவரின் கோல்ட் வாட்ச் ஐ ஏரியிலேயே வைத்துவிட்டு போய் விட்டார் . அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த இவன் ,அதை பத்திரமாக எடுத்து அவரிடம் கொடுத்தான் .  அப்போது இவன் மேல் அவருக்கு அளக்க முடியாத பூரிப்பு. காரணம் அந்த கடிகாரத்தின் மதிப்பு 4500 ரூபாய் . இதை எடுத்த ஒரு நாளிலேயே கொடுத்துவிட்டானே என்று .  அதை சட்டென்று மறந்துவிட்டு இவனை விசாரிக்க ஆரமித்தார் ,
தம்பி யாருப்பா நீ ? அய்யா நான் கொரவன் மகன் .  அட ஒக்கால ஓழி ,கொரவன் மொவனா நீ? உங்க அப்பன் என் கொள்ளையில தழ ஒடிக்கவந்து மாட்டுனவன்  ,அவனுக்கு  பொறந்த பய நீ இவளோ நல்லவனா இருக்கியே ,சரி எத்தனாவது படிக்கிற? அய்யா நான் ஏழாம்ப்பு படிக்கிறேன்.  நம்ம பள்ளிக்கூடத்துல தானே , சரி உனக்கு வருசா வருஷம் நோட்டு புத்தக செலவ நான் பாத்துகிறேன் . நல்லா படி . கைல என்னா வச்சி இருக்க ? அய்யா அது மீனுங்க . உசுறு இருக்கா?  இப்பதானுங்க புடிச்சது அம்புட்டும் சிலேப்பி . சரி இந்தா 10 ரூபாய் அந்த மீன கொடு . இல்லைங்க அய்யா ஊட்டுல சாப்புட ஒண்ணும் இல்ல ,இத எடுத்துக்கிட்டு போய் தான் வருக்கணும் ,அப்பாவும் அம்மாளும் காட்டுமன்னார்குடிக்கு நெல் அறுக்க போய் இருக்காங்க . நாளைக்கி வராங்க ,அரிசி தீர்ந்து போச்சி, ரேஷன் கடையும் சனிக்கிழமைதான் தொறப்பான் ,வேணும்னா வாங்க நானே உங்களுக்கு வறுத்து தறேன்.
அன்று இவன் வறுத்து கொடுத்த மீனை சாப்பிட்டவர் ,இன்று வரை மீன் என்றால் அது கொரவன் மொவன் வறுவல் தான் என்று தன் பொண்டாட்டி உட்பட கண்ணில் படும் எல்லோரிடமும் சொல்லிவந்தார் .
டேய் கொரவா ,டேய்
அய்யா என்ற படி உள்ளிருந்து வந்தார் கொரவன் . எங்கடா உன் புள்ள ? அய்யா உள்ள தூங்குராணுங்க . அவங்கிட்ட மீன் பிடிக்க சொல்லு ,சாயங்காலம் வரேன் ன்னு சொல்லிபுடு .  தூக்கத்தில் இருந்தவனை எழுப்பினார் கொரவன் . தம்பி வாத்தியார் மீன் புடிக்க சொன்னார் , சாயங்காலம் வரேன்னார் என்று சொல்லி முடிப்பதற்குள் ,கூரையின் மேல் பனியில்  நனைந்து கொண்டிருந்த தூண்டிலை எடுத்தான் . தக்கை பனியில் நனைந்திருந்தது . நேராக ஓடி போருக்குள் இருந்த சோளத்தட்டையை ஒடித்தான் . அதை கிழித்து காய்ந்திருந்த சோளத்தண்டை நொடியில் ஒடித்து தக்கை ஆக்கினான் . ஏரிக்கு செல்லத் தயாரானபோது சட்டென்று நினைவுக்கு வந்தது மண் புழு வேணுமே . சரி அத குப்பைல நோண்டிக்கலாம்னு விர்ரென்று ஓட ஆரமித்தான் .  காலை நேரம் என்பதால் வெறும் சிலேப்பி தான் மாட்டும் . அதற்கு காரணம் இருந்தது . ஊராட்சி மன்ற தலைவர் ஏரியை அந்த வருடம் குத்தகைக்கு எடுத்திருந்தார் . இரவு நேரங்களில் பண்ணி வெட்டையை சாக்கில் கட்டி மூழ்கடித்துவிடுவார். அதை தின்பதற்கு சிலேப்பிகள் கரையின் ஓரம் வருவதுண்டு . பண்ணி வெட்டை கொட்டுரத ஊர்ல யாரும் கேட்க முடியாது ,கேட்டா அரசாங்கம் கொடுக்குற எந்த சலுகையும் கெடைக்காது. அதுக்கு பயந்தே அந்த தண்ணியில் குளிச்ச மக்கள் தோல் வியாதி வந்து தர்மாசுபத்திரிக்கு போவதை நானே பார்த்து இருக்கேன்.  கரையின் ஓரம் இருந்த புளிய மரத்தின் அடியில் இருந்த குப்பை குழியில் குச்சியால் தோண்டி ஒரு புகையிலை பேப்பரில் கொஞ்சம் மண் நிரப்பி பிடித்த மண் புழுவை அதில் விட்டான் . மண் புழுவின் மீது எப்போதும் ஒரு திரவம் சுரந்தவாறே இருக்கும் ,சலியை போல கொழக்கொழ தன்மை யுடையது .
புழுவை கையால் தொடும்போது ஒட்டிக்கொள்ளும் ,கையை விட்டு பிரிவதற்கு பலமணி நேரமாகும் . அதையெல்லாம் இவன் கண்டுகொள்வதில்லை. வாத்தியாருக்கு மீன் பிடிப்பதென்றால் எதுவும் மறந்து போகும் .  கரையின் ஓரம் இருந்த ஆவாரம் செடியின் பக்கத்தில் உட்கார்ந்து மூங்கிலில் கட்டியிருந்த நரம்பை அவிழ்த்தான் . அதன் நுனியில் கட்டப்பட்டிருந்த கொக்கிவடிவ முள்ளில் ,ஒரு மண் புழுவை லாவகரமாக கோர்த்தான் . அந்த முள்ளில் புழுவை கோர்த்தல் அவ்வளவு எளிது அல்ல.நம் கையசைவிற்கு ஏற்றவாறு புழு நெளியும் ,அழுத்தி பிடித்து சரியாக நுழைக்காவிட்டால் ஒரு பொழுது கூட ஆகும் .
கடலில் வலை விரிப்பது போல ரஜினிகாந்த் ஸ்டைலில் ஏரிக்குள் தூண்டிலை வீசினான் . அமைதியாக கையை அலம்பிட்டு ,ஆவார செடியின் மேல் தூண்டிலை வைத்தான் . ஆழத்தை யூகித்து பார்த்தான் . ஆழம் குறைவான இடத்தில் தக்கையை கொஞ்சம் மேலே கட்டவேண்டும், ஆழம் அதிகமான இடத்தில் கொஞ்சம் நீளமாக தக்கையை விட்டு கட்டவேண்டும் என்பதை நினைவு படுத்தி தூண்டிலை எடுத்து ஆழம் பார்த்தான் . எதிர்பார்த்த அளவு ஆழம் இருந்தது . மீண்டும் தூண்டிலை வீசி ஆவாரம் செடியில் வைத்தான்.
தூரத்தில் மேல சத்தம் அங்கிருந்து வரும் காற்றில் புதிதாக சேர்ந்திருந்தது . சத்தம் நல்ல காரியங்களுக்கு வருவது போல தெரியவில்லை ,எழவு வீட்டில் இருந்து வருவதை இசை திறமையை வைத்து கண்டுபிடித்து விட்டான் . தூண்டில் போட்டு வெகு நேரமாகியும் எந்த மீனும் இவன் புழுவை நக்கவில்லை. ஒரு வேலை தின்னு இருக்குமோ என்று தூண்டிலை எடுத்து பார்த்தான் . புழு நெளிந்து கொண்டிருந்தது .
 வேறு இடத்தில் போடலாம் என இடப்பெயர்ச்சி செய்தான் .  சூரியன் உச்சிக்கு வந்தும் எந்த மீனும் அகப்படவில்லை. இரையாக ஐந்தாறு மண் புழுவை ஏரிக்குள் வீசி காத்திருந்தான் .  தூரத்தில் மக்கள் கூட்டமாக கையில் குடத்துடன் வந்துகொண்டிருந்தனர் . எழவு வீட்டிற்கு தண்ணீர் எடுக்க வந்திருந்தனர்.  ஏரிக்கரையில் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன . தூண்டிலை கவனிப்பதை விடுத்து  கரை பக்கம் பார்வையை போட்டான் . ஏதோ தெரிந்த முகம் ஓயாமல் அழுவது தெரிந்தது . யாரென்று மட்டும் தெரியவில்லை. தக்கை லேசாக அசைந்தது . டபடப வென்று கொத்தி உள்ளே இழுத்தால் அது சிலேப்பி, மெதுவாக கொத்தி ஒரு வட்டம் போட்டு உள்ளே இழுத்தால் அது கெளிர். கொத்திக்கொண்டே இருந்தால் அது கெண்டை இதில் எந்த அடையாளமும் தக்கை அசைந்ததில் தெரியவில்லை . ஒரு வேலை அலையின் வேகத்தில் அசைந்து இருக்கலாம் என்று தூண்டிலை எடுத்து பார்த்தான் ,காலையில் கோர்த்த அதே புழு உயிரை விட்டிருந்தது . இந்த புழு ராசியில்லை என்று அதை அவிழுத்து ,வேறு புது புழுவை கோர்த்தான்.  வந்த மக்கள் குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு கிளம்பினர்.  இவன் உதடு வறண்டு போய் இருந்தது , காலையில் இருந்து உடலுக்கு சக்தி அளிக்க கூடிய எதையும் இவன் சாப்பிடவில்லை. ஏரியின் எதிர் பக்க கரைக்கு சென்று படிதொறையில் தூண்டில் போட்டான் . படிதுறைக்கு பக்கத்தில் இருந்த கொட்டாய்யில் பினவண்டி இழுக்கும் சத்தம் கேட்டது . வெட்டியான்கள் பின வண்டியை தள்ளிக்கொண்டு இருந்தனர் . யார் செத்தது என்று கேட்க தயாரானன் . வெட்டியான் இடுப்பில் இருந்த கோட்டர் பாட்டிலை திறந்து ,இருந்த மூவரும் ஆளுக்கு கொஞ்சமாக குடித்துக் கொண்டிருந்தினர் ,அதை பார்த்ததும் கேட்கவில்லை . வண்டியை தள்ளிக்கொண்டு புறப்பட்டனர். பாட்டிலில் ஒரு மூடி அளவிற்கு சரக்கு மீதம்  இருந்தது.
பொழுது சாய்ந்தது . பொணத்தை எடுத்துட்டாங்க ,தாரை தப்பட்டை முழங்க ,வான வேட்டுகளுடன் தெரியாத பொணம் இடுகாட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது .  மூணு ஊருக்கு பொதுவான இடுகாடு . ஏரிக்கு பக்கத்துல இருந்தாலும் மூணு ஊரை விட்டு தள்ளியே இருந்தது . பிரம்மை பிடித்தவன் போல தன்னை மறந்து தக்கையை பார்த்துக்கொண்டிருந்தான் . ஒரு அசைவு ,லேசாக தராசு முள் துடிப்பது போல ,அந்த ஒரு நொடி அசைவில் தீர்மானித்தான் நிச்சயம் அது உலுவைதான் . உலுவை அளவிற்கு தில்லான மீன் இருக்க வாய்ப்பில்லை . கொத்திய முதல் கொத்திலேயே புழுவை கவ்வும் லாவகம் உலுவைக்குதான் தெரியும் . காலையில் இருந்து காத்திருந்ததற்கு பலன் என்று எழுந்து தூண்டிலை மாட்டு வண்டி ஓட்டுபவன் போல பிடித்து அந்த ஒரு நொடிக்காக காத்திருந்தான் .
பொணம் ஒத்த புளியமரத்திடம் வந்து கொண்டிருந்தது . சடசட என மழை எதிர்பார்க்கா வண்ணம்  பெய்ய ஆரமித்தது ,வெயிலும் தன் பங்கிற்கு அடித்துக்கொண்டிருந்தது . இப்படி ஒரு வித்யாசமான வானிலையை அவன் அதிகமாக பார்த்ததில்லை . யாராவது நல்லவங்க செத்துபோனா மழை வரும்னு அவனோட அம்மா சொன்னது நினைவிற்கு வந்தது . சடக்கென்று தூண்டிலை இழுத்தான் ,நல்ல ரெண்டு கிலோ எடையுடைய ஒரு உலுவை தூண்டிலின் நுனியில் மாட்டி இருந்தது . அவன் கண்ணில் அப்படி ஒரு சந்தோஷம் சாயங்காலம் வரும் வாத்தியார் வயித்துக்கு நீ போதும் ,இனிமே அம்புடுறது எனக்கும் எங்க அப்பனுக்கும் . பிடித்தமீனை ஒரு குச்சியால் அதன் செதில் வழியாக உள்ளே விட்டு ,வாய் வாழிய கோர்த்தான் . அந்த மீனால் சுவாசிக்க முடியும் ,ஆனால் நீந்த முடியாது . கரையின் மேட்டில் குச்சியை சொருகி, தண்ணீரில் கவிழ்த்த வாறு மீனை நீருக்குள் விட்டான் .

பொணத்திற்கு முன்னே வந்து கொண்டிருந்தவர்கள்,  இருந்தாலும் வாத்திக்கு நல்ல சாவுதான் ,கோவில் முன்னாடி செத்து போய் இருக்கான் . நேரா சொர்க்கத்திற்கு போவான் ,மழை கூட பேயுது பாரு . என்றபடி இவனை கடந்து போனார்கள் .  மழையின் வேகத்தை விட இவன் கண்களிலிருந்து தண்ணீர் வேகமாக மழையுடன் கரைந்து ஏரிக்கு நீர் சேர்த்துக்கொண்டிருந்தது .
இவன் சொருகி வைத்திருந்த குச்சி தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது . அதை எடுத்து பார்க்கும் பொது அதில் கோர்த்திருந்த உலுவை நழுவி இருந்தது .
இவன் நினைத்து கொண்டான் . இனி யாருக்கு வேணும் அந்த உலுவை ...................................!

Sunday, March 30, 2014

Cashew nut say my life

போன வாரத்திற்கு முன் பூ கருகி இருந்தது ,போன வாரம் இலை கருகி இருந்தது , இந்த வாரம் மரம் கருகிபோச்சி அடுத்த வாரம் எங்க வயிறு கருக போகுது. வாழ்வாதாரத்தை தொலைக்க போகும் முந்திரி குடியினர். காட்டிற்கு போயி திரும்புவதற்குள் காலி ஆகின்றன பானை தண்ணி . ..... குரங்கோடு குரங்காக கூடையில் பழம் பொறுக்கி, குவியலாக கொட்டி , பழைய கஞ்சியை குடிச்சிட்டு கொட்டையையும் பழத்தையும் பிரிக்க பொழுது சாஞ்சி போகும் .கொட்டை மூட்டையை தலையில் கட்டிக்கொண்டு, ஆட்டிற்கு கூடையில் பழம் எடுத்துக்கிட்டு, ஆநிறைகளோடு வீடு திரும்பும்போது நிலா வந்திருக்கும் . மறுநாள் பொறுக்கிய கொட்டையை வெயிலில் வாட்டி ,மீந்திருக்கும்இடத்தில் பழத்தை வத்தல் போட்டால் வீதியெங்கும் வீசும் முந்திரிபழ வாசம் . கோடை முழுவதும் முந்திரி பழத்தின் குளிர்ச்சியில் கழிக்கும் எங்களுக்கு இந்த வருடம் , இன்னும் பத்து ஆண்டுகளுக்கு பிறகு நடக்க போகும் என் திருமணத்துக்கு இப்பவே விறகு கட்டைகளாக ,மாறுகின்றன முந்திரி மரங்கள் . காய்க்கிற கொட்டையில் ஒரு பங்கை பாயாசத்திக்கு இருப்பு வைத்திருப்பது வழக்கம் .ஆனால் இந்த வருடமோ பாயாசத்திக்கு மட்டும் தான் காய்க்கும் போல இருக்கு. ஊருக்குள் புதுசா கெளம்பி இருக்குற சாமிக்கிட்ட மழைய பத்தி கேட்டா மலை ஏறிடுது . போர் அடிக்க கடன் தரமறுக்கும் வங்கிகள் ,மின்சாரம் தர மறுக்கும் அரசு , இவையெல்லாம் இந்த வருடம் எங்களுக்கு என்ன கதை சொல்ல போகுது ? பருவம் பார்த்து விதைச்ச பொருளுக்குதான் விலை ஏத்துமா அரசு? , ஆண்டிற்கு ஒரு முறை விளையும் எங்க முந்திரு பருப்பு அத்யாவசியமான பொருள் நு சொல்லி விலை ஏத்த மறுக்குறாங்க .. கொள்ளைக்கி போனா அங்க வேதனைதான் வெளஞ்சி நிக்கிது. அம்மாவாசைக்கு அமாவாசை பிஞ்சி இறங்கும் . இந்த அமாவாசை எங்க வயித்துல நெருப்புதான் இறங்கும் . கருகி போன பூவை பார்த்த்து ஏமாற போகுது அமாவாசை . ஒரு மூட்டை கொட்டை போட்டா ,ஒரு பவுனு எடுக்கலாம் ,இப்ப வெளையிற அம்புட்டையும் போட்டாலும் அறை பவுனுக்கு நாக்கு தள்ளுது. பவுனு விலை எறிபோச்சி ,எங்க விளைச்சலோ குறைஞ்சி போச்சி. தீ மிதிக்கறதுன்னா என்னன்னு தெரியனும்னா எங்க பொட்ட காட்டுல வந்து கொட்டை பொறுக்குனா தெரிஞ்சிக்கலாம். உச்சிவெயிலுல நடு காட்டுல இருந்து ரோட்டுல போற ice காரன கூப்பிட்டுகிட்டே ஓடி ,இருபது கொட்டைய கொடுத்து ரெண்டு ice வாங்கிக்கிட்டு , வாங்குன ice கரையிறதுக்குள்ளஅம்மாவும் நானும் சாப்பிடுநுமேன்னு , முந்திரி மரத்துல புகுந்து ஓடி ,எத்தன பள்ளிக்கூட uniform சட்டை குச்சியில் மாட்டி கிழிஞ்சி இருக்கு ! துண்ட தண்ணியில நனச்சி ,தலையில கட்டிக்கிட்டு அலக்கு குச்சை எடுத்து அண்ணாந்து பார்த்துகிட்டே ஒரு முந்திரிய சுத்தி வரதுக்குள்ள , நாக்க்கு வறண்டு போகும் ,, அப்படி இருந்தும் கொட்டை பொறுக்க சந்தோஷமா இருக்கும் ,ஏண்ணா விளைச்சல் அப்படி இருக்கும் ,இலையே தெரியாத அளவுக்கு கொத்து கொத்தா சிகப்பும்,மஞ்சள்லுமா பழம் தொங்கி கிட்டு இருக்கும் . . விடியிறதுக்கு முன்னாடி போனால் மயில் இறகு எடுக்கலாம் ,இருட்டுனதுக்குஅப்புறம் போனால் முயலோடு வரலாம் . எத்தனை வளங்களை அடக்கியது எங்க முந்திரி காடு . இப்ப எங்க பார்த்தாலும் மரங்கள் சடலங்களா இருக்கு . வர வருஷம் செமஸ்டர் fees எப்புடி கட்றதுன்னு யோசிச்சிக்கிட்டே எழுதிக்கிட்டு இருக்கேன் .